
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, ஐபிஎல்-இல் விளையாடுவதன் மூலம் வெளிநாட்டு வீரர்களுக்கும், இந்தியாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பல வெளிநாட்டு வீரர்களுக்கு, அவர்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஐபிஎல் நல்ல அடித்தளத்தை அமைத்தும் கொடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை, தங்கள் அணியில் இடம் பெற கடும் போட்டி போட்டு கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு மட்டுமின்றி சில அசோசியேட் நாடுகளின் வீரர்களும் ஐபிஎல்லில் விளையாடி உள்ளனர்.
அந்த வகையில், அசோசியேட் அணியாக இருந்து, சமீப காலங்களில் முக்கிய அணியாக மெருகேற்றிக் கொண்டிருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் விளையாடி தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான ரஷித் கான், மற்றும் முகமது நபி, ஐபிஎல் போட்டிகள் விளையாடி தங்களுக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்.