
ஆஸ்திரேலியா - நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் மதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் நமீபியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நமீபிய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக அறியப்படும் நிக்கோலஸ் டேவின், ஜான் ஃபிரைலிங்க், ஜேஜே ஸ்மித், டேவிட் வைஸ் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் 4ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தேவையான பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த எராஸ்மஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதன் காரணமாக நமீபியா அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.