
யுஏஇ-யில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதேசமயம் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், பாகிஸ்தானுடான சூப்பர் 4 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து அந்த அணி ஆஃப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் யுஏஇ-யில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான வங்கதேச டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிய கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக லிட்டன் தாஸ் இந்த தொடரில் இடம் பிடிக்க வில்லை. இதன் காரணமாக அணியின் கேப்டனாக ஜக்கார் அலி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஆசிய கோப்பை தொடரின் கடைசி இரண்டு சூப்பர் 4 ஆட்டங்களிலும் வங்கதேச அணியின் கேப்டனாக ஜக்கார் அலி செயல்பட்டிருந்தார்.