
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனைடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து காளமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி - முகமது நபி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.