நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது - ரிஷப் பந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்து அடைந்த பிறகு முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 30 அன்று உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.
உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது.
Trending
கடந்த மாதம், முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்துக்கு பிறகு தனது வாழ்க்கையை எவ்வாறு வாழ்கிறேன் என்பது குறித்து பேசி உள்ளார்.
அதில் பேசிய அவர், “நான் இப்போதும் நன்றாக இருக்கிறேன். என் உடல் நலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்படுகிறது. கடவுளின் அருளாலும் என்னுடைய மருத்துவ நிபுணர்களின் உதவியாலும் நான் விரைவில் முழு உடல் தகுதியை எட்டுவேன். என்னை சுற்றி நடக்கும் விஷயம் நல்லதா கெட்டதா என்று எனக்கு சொல்வதில் கடினமாக இருக்கிறது. ஆனால் விபத்துக்கு பிறகு வாழ்க்கை மீதான கண்ணோட்டமே எனக்கு மாறிவிட்டது. வாழ்க்கையில் தற்போது ஒவ்வொரு நாளையும் நான் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்.
உயிரோடு இருப்பதே பெரியது என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கி இருக்கிறது. இதனால் என் வாழ்க்கையில் நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது கனவை துரத்துவதற்காக கடும் உழைப்பை செய்கிறோம். இதன் மூலம் நம் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயத்தை கூட நாம் கவனிக்க மறுக்கிறோம். என்னுடைய விபத்திற்குப் பிறகு தற்போது என்னால் பல் துலக்க முடிவதையே நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதைப் போன்று வெயிலில் ஒவ்வொரு நாளும் அமர்ந்து என் மகிழ்ச்சியை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
நம் கனவை துரத்துவதற்காக இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நம்மால் செய்ய முடிகிறது என்பதையே நாம் நினைக்க மறுக்கிறோம். என்னுடைய விபத்துக்கு பிறகு நான் அறிந்து கொண்டதும் மக்களுக்கு நான் சொல்ல நினைப்பதும் ஒன்றே ஒன்றுதான். ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு கொடுத்துள்ள ஆசீர்வாதம். அதனை மனதில் ஏற்றுக் கொண்டு நான் வாழ்கிறேன். விபத்திற்கு பிறகு தற்போது ஒவ்வொரு தருணத்திலும் என்ன சந்தோஷத்தை தேட முடியுமோ அதைத்தான் நான் செய்கிறேன்.
தற்போது மருத்துவ நிபுணர்கள் கொடுத்துள்ள அட்டவணைப்படி தான் என் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன். காலையில் எழுந்து முதலில் பிசியோதெரபி பயிற்சியை செய்கிறேன்.அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்ய தொடங்குகிறேன். என்னால் எவ்வளவு வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்பதை பொறுத்து இந்த பயிற்சி அமையும். இதேபோன்று மாலை நேரத்தில் ஒரு பிசியோதெரபி பயிற்சியும் இருக்கிறது.
தினமும் நான் பழங்களையும் ஜூஸ் வகைகளையும் குடித்துக் கொள்கிறேன். வெயிலில் கொஞ்ச நேரம் அமர்ந்து இயற்கையை ரசிக்கிறேன். என்னால் மீண்டும் நடக்கும் வரை இதைத்தான் தொடர்ந்து செய்ய உள்ளேன். எனக்காக இவ்வளவு பேர் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் ஆதரவளியுங்கள். உங்களை மீண்டும் நான் வந்து சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now