
இந்திய அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்த போது, தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் அஜித் அகர்கர். இந்திய அணிக்காக 191 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதன்பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர், ஓய்வை அறிவித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டார்.
இதனிடையே இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவருக்கான பதவிக்கு இரு முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக பிசிசிஐ நிர்வாகம் சேத்தன் சர்மாவை தேர்வு செய்தது. இந்த நிலையில் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சையில் சிக்கினார். இதனால் தானாக முன் வந்து சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக பிப்ரவரி 17ஆம் தேதி முதலே அந்தப் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, மீண்டும் தேர்வுக் குழு தலைவர் பதவி குறித்த கேள்விகள் எழுந்தன. பின்னர் ஜூன் 23ஆம் தேதி தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது.