
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் நீடிக்கும் என்பதால் அவர்களும் கடும் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக மூன்றாவது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுல் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். மேலும் அவரது உடற்தகுதையை பொறுத்தே ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம்பிடிப்பார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
இதன் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதற்காக மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்துவ் விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஜஸ்ப்ரித் பும்ரா இடத்தை முகேஷ் குமாரும், கேஎல் ராகுல் இடத்தை ரஜாத் பட்டிதாரும் நிரப்புவார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தான் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இத்தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஆகாஷ் தீப்பிற்கு மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.