டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்த்திய அகீல் ஹொசைன்!
டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் சாதனையை அகீல் ஹொசைன் படைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்து அசத்தினர். உகாண்டா அணி தரப்பில் கேப்டன் பிரையன் மசபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணியானது விண்டீஸ் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தது.
Trending
அதிலும் குறிப்பாக அந்த அணியில் ஜுமா மியாகியைத் தவிர்த்து வேறெந்த பேட்டரும் இரட்டை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. இதன் காரணமாக உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 39 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியாது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேற்கொண்டு அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரஸல், குடகேஷ் மோட்டி, ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அகீல் ஹொசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் 4 ஓவர்களை வீசி வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியதன் மூலம், டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை தனதாக்கியுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எந்த ஒரு வீரரும் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றாதது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now