
வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோவ்மன் பாவெல் தலைமையில் களமிறங்கும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் டேரன் சமி தலைமியில் கோப்பையை கைப்பற்றி அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியால் அதன்பின் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதன் காரணமாக அந்த அணி இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடும் வாய்ப்பை இழந்து. எப்போதும் அதிரடிக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் அணியானது சமீப காலங்களில் பெரும் தோல்விகளைச் சந்தித்ததுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்க முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது.