T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![Andre Russell has surpassed Dwayne Bravo to become the leading wicket-taker for West Indies in T20 W T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/Andre-Russell-Breaks-Dwayne-Bravo-Record-lg1-lg.jpg)
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கைல் மேயர்ஸ் - ரோஸ்டன் சேஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கைல் மேயர்ஸ் 35 ரன்களிலும், அரைசதம் கடந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களிலும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் 136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர்.
Trending
இதனால் தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் மீண்டும் தொடங்கிய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 17 ஓவர்களுக்கு 123 ரன்களாக இலாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசெனும் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ரஸல் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக டுவைன் பிராவோ 27 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆண்ட்ரே ரஸல் 29 விக்கெட்டுகளை கைப்பற்றி இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்
- 29 விக்கெட்டுகள் - ஆண்ட்ரே ரஸல்
- 27 விக்கெட்டுகள் - டுவைன் பிராவோ
- 24 விக்கெட்டுகள் - சாமுவேல் பத்ரீ
- 17 விக்கெட்டுகள் - அல்சாரி ஜோசப்
- 17 விக்கெட்டுகள் - ரவி ராம்பால்
Win Big, Make Your Cricket Tales Now