
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 5ஆவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள கேரளா மற்றும் ஹரியான அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேரள அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குன்னமொல் 55, அக்ஷய் சந்தரன் 59, கேப்டன் சச்சின் பேபி 52, முகமது அசாரூதீன் 53 ரன்களைச் சேர்த்தனர். ஹரியான அணி தரப்பில் அபரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷுல் காம்போஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹரியான அணி வீரர்கள் கேரள அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் நிஷாந்த் சந்து 29 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கேரள அணி தரப்பில் நிதீஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.