
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியிலிருந்து தனிபட்ட காரணங்களினால் விராட் கோலி விலகினார், ஆனால் அவருடைய விலகலுக்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் ஒரு தரப்பில் விராட் கோலியின் தாயாருக்கு உடல்நிலை பாதித்துள்ளதாகவும், அதன் காரணமாக விராட் கோலி தொடரிலிருந்து விலகினார் என்று கூறினர். ஆனால் அதனை மறுத்து விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்பின், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக அவர் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியதாகவும் விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான ஏபிடி வில்லியர்ஸ் அறிவித்தார். ஆனால் ஒருசில தினங்களிலேயே அவர் விராட் கோலி குறித்து தவறான தகவலை வழங்கிவிட்டேன் என்று மன்னிப்பு கோரினார். இதனால் விராட் கோலியின் விலகலுக்கான உண்மை காரணம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.