
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனான பிசிசிஐ ஒப்பந்த முடிவுக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், 2 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். அவரின் பதவிக்காலம் முடிவடைந்த சூழலில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இதனால் என்சிஏ தலைவராக உள்ள விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், டி20 அணிக்கு என்று பிரத்யேக பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் இந்திய அணி டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவை அணுகியுள்ளது. இவர் ஏற்கனவே குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். குஜராத் அணி அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றதுடன், கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.