
வெற்றிகரமாக நிறைவு பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை இறுதிக்ப்போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா சிறப்பாக விளையாடி கோப்பை வென்று ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த தொடரில் ஜெய்ஷவால், ருதுராஜ், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய் போன்ற நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியின் முக்கிய பங்காற்றியதுடன் தங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர். இதில் ரிங்கு சிங் 4 போட்டிகளில் 105 ரன்களை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.
கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் அடுத்தடுத்த 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் இந்தியாவுக்காக அறிமுகமான ரிங்கு சிங் அயர்லாந்து டி20 தொடரிலும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்பில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். அதே போல இத்தொடரிலும் அசத்திய அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.