தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக செயல்பட்டு வந்த ரூபாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்த சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தலைவர் பதவிக்கு அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியும், பிரபு என்பவரும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.
இன்று டிஎன்சிஏவின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பிரபு என்பவர் தேர்தலிலிருந்து தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Trending
இவர் முன்னதாக விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் இருந்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் மகள் ரூபா தேர்வு செய்யப்பட்டார். நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துவரும் அசோக் சிகாமணி, அப்போதே தலைவர் பதவிக்கு முயற்சி செய்தார்.
ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரிகட்டி, அவரை துணைத் தலைவராக்கினார் இந்தியா சிமண்ட்ஸ் ஸ்ரீநிவாசன். இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு போட்டியின்றி அசோக் சிகாமணி தேர்வாகியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனியும், பொருளாளராக ஸ்ரீனிவாச ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். பிரபு தலைமையிலான எதிரணி போட்டியாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றதால் செயலாளர், பொருளாளரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now