உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு உள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தாண்டு வரவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடைபெற்றாலும் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு உள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வெல்லலாம் என முதல்முறையாக நிரூபித்து காட்டியவர் தோனி தான். 2011இல் அவர் காட்டிய பிறகு 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போன்ற அணிகள் சொந்த மண்ணில் கோப்பை வென்றன.
அதே போன்ற வாய்ப்பு தான் இந்தாண்டு இந்தியாவுக்கும் வந்துள்ளது. தோனியை போல ரோஹித் சர்மாவும் செய்துக்காட்டுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்றார் போல இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்துவிட்டது. நியூசிலாந்து தொடரில் 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது.
Trending
இந்நிலையில் என்னதான் சொந்த மண்ணில் விளையாடினாலும் இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “2019 உலகக்கோப்பைக்கு பின் சொந்த மண்ணில் இந்தியாவின் ரெக்கார்ட்கள் அட்டகாசமாக உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த பெரும்பாலான அணிகளை வீழ்த்திவிட்டது. அதாவது தற்போது வரை 14 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றி சதவீதம் 70 - 80 ஆக உள்ளது.
ஆனால் இந்த 18 ஒருநாள் போட்டிகளுமே வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றவை ஆகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை எடுத்துக்கொண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு என ஒரு 4 மைதானம், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு 2 மைதானங்கள் என குறைவாகவே வைத்துள்ளனர். இதனால் அந்த களங்களில் நிறைய விளையாடி, அதன் தன்மையை நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.
14 மைதானங்களில் 14 வெற்றிகளை பெற்றுள்ளனர். இதனால் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட களங்களை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள முடியவில்லை. இது இந்திய அணி வீரர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது தான் கடினமாக இருக்கும். எனவே இனி வரும் போட்டிகளை குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் நடத்தினால் ஓரளவிற்கு தயாராகலாம்” என அஸ்வின் கூறியுள்ளார்.
இந்திய அணி 2019இல் இருந்து இந்தியாவில் பெற்ற 4 தோல்விகளும் சென்னை, மும்பை, புனே, லக்னோ மைதானங்களில் பெற்றவை ஆகும். இதில் பெரும்பாலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, ரன் போதுமானவையாக இல்லாமல் தோற்றுள்ளது. எனவே இனி சேஸிங்கில் இந்தியா கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now