
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. ஏனெனில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் இளம் வீரர்களான சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுதவிர்த்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் இடங்களை உறுதிசெய்துள்ள நிலையில், அக்ஸர் படேல் - குல்தீப் யாதவிற்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேற்கொண்டு முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகியோருக்கு இடையேவும் கடும் போட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிச்சயம் இப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.