IND vs NZ, 1st Test: மாயாஜாலம் நிகழ்த்திய அஸ்வின்; இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், கடந்த 9ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் மார்னஸ் லபுசாக்னே அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் இந்திய அணி, 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. அதன்பின் 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் ரோஹித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ரோஹித் - அஸ்வின் ஜோடி, 42 ரன்கள் சேர்த்தது. அதன்பின் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த அஸ்வின், மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தபோதும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய ரோஹித் சர்மா, 171 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அதன்பின் 120 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா - அக்ஸர் படேல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 300 ரன்களைக் கடந்ததது. இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இன்று முன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடனும், அக்ஸர் படேல் 52 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் ஜடேஜா 70 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஷமி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 பவுண்டரி,3 சிக்சர்கள் என 37 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் 84 ரன்கள் சேர்த்த நிலையில், பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரர் டாட் மர்ஃபி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு வில்லனாக அஸ்வின் தனது பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அலரவைத்தார். இதில் கவாஜா 5, வார்னர் 10, லபுசாக்னே 17 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்ற வீரர்களை அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் முகமது ஷமி தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now