
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 4ஆவது போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவருமே நிதானமாகவே ரன்கள் சேர்த்தனர். ஆனால், ஷுப்மன் கில் மட்டுமே 25 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 80 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த விராட் கோலி அடுத்த 10 ரன்களில் இந்திய அணி சேர்த்த நிலையில் 3 ரன்களில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டியில் தனது 51ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.