
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 14 ஓவர்களாக குறைப்பட்டது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு குர்டின் பேட்டர்சென் - ஜோஷ் பிலிப் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் தந்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டர்சென் 38 ரன்களிலும், பிலீப் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 19 ரன்களையும், ஹைடன் கெர் 32 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 14 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது.