தனது ரோல் மாடல் யார் என்பதை பகிர்ந்த ஷுப்மன் கில்!
கிரிக்கெட்டில் தனது ரோல்-மாடல் யார் என்ற கேள்விக்கு இளம் வீரரான ஷுப்மன் கில் ஓபனாக பதில் கொடுத்துள்ளார்.
ஷிகர் தவானிற்கு பதிலாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த ஷுப்மன் கில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தனக்கான இடத்தை வெகு சில போட்டிகளிலேயே உறுதி செய்து கொண்டார். டி20 போட்டிகளில் பெரிதாக செயல்படாவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் மாஸ் காட்டி வரும் ஷுப்மன் கில், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்கான தங்களது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்து பல்வேறு சாதனைகளும் படைத்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதத்துடன் மொத்தம் 360 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகள் படைத்த ஷுப்மன் கில்லை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரும் எதிர்காலமாக பார்க்கப்படும் சுப்மன் கில்லை பல முன்னாள் வீரர்கள் வியந்து பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட்டில் தனது ரோல் மாடல் யார் என்பது குறித்து ஷுப்மன் கில்லே ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
Trending
சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஷுப்மன் கில் பதிலளிக்கையில், “இது கடினமான கேள்வி. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலி தான் எனது ரோல் மாடல். நான் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணமே சச்சின் டெண்டுல்கர் தான், எனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் தீவிரமான ரசிகர். ஆனால் நான் விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்தே பல விசயங்களை கற்றுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலியிடம் இருந்து அதிகமான விசயங்களை கற்று வருகிறேன்” என்றார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் குறித்து ஷுப்மன் கில் பேசுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவே முயற்சிக்கிறேன். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்வாறும், போட்டியின் தன்மைக்கு ஏற்பவும் விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன். அதிகமான ரன்கள் குவிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை, இந்திய அணிக்கான எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பதே முக்கியம். பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டனர்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now