இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது.
இதில் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம் போல் அதிரடியாக தொடங்கிய நிலையில், 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஷுப்மன் கில்லுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அச்சமயத்தில் சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும், ஷுப்மன் கில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களையும் சேர்த்தனர்.