AUS vs PAK, 3rd T20I: மார்கஸ் ஸ்டொய்னிஸ் காட்டடி; பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹோபார்ட்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வானுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சல்மான் ஆகா அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஃபர்ஹான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Trending
பின்னர் இணைந்த பாபர் ஆசாம் -ஹசீபுல்லா கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஹசீபுல்லா கான் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களிலும், கேப்டன் ஆகா சல்மான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 41 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய இர்ஃபான் கான் 10 ரன்னிலும், ஆப்பாஸ் அஃப்ரிடி ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாடிய ஷாஹீன் அஃப்ரிடி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்னிலும், ஜஹாந்தத் கான் 5 ரன்னிலும், சுஃபியான் முகீம் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயன்ற ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இங்கிலிஸ் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் 23 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவ்ரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 61 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகன் விருதையும், ஸ்பென்சர் ஜான்சன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now