இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது நேற்று மெல்போர்னில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்ஷன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 26 ரன்னிலும், நிதீஷ் ரெட்டி 16 ரன்னிலும், தனுஷ் கோட்டியான், கலீல் அஹ்மத் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரெல் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.