
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி கொண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய உலகின் டாப் 2 அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான திகழ்வதுடன் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பாமல் இந்தியாவை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை வரலாற்றில் 7 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள அந்த அணி 5 கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் இத்தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி அரையிறுதிச்சுற்றுக்கு வராது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து தற்போது இந்தியாவை சந்திக்க உள்ளது. மறுபுறம் இத்தொடரில் சொந்த மண்ணில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியிலும் வெல்வதற்கு போராட உள்ளது.