
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
முகமது ரிஸ்வான் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் காம்ரன் குலாமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப் உள்ளிடோருடன் முகமது இர்ஃபான் கான், முகமது ஹொஸ்னைன் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். ரிஸ்வான் தலைமையேற்கும் முதல் போட்டி இது என்பதால் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.