
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் நிதீஷ் ரெட்டி சதமடித்தும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆரைசதம் அடித்தும் அசத்தியன் காரணமாக 369 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 114 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டை இழ்ந்து தடுமாறிய நிலையில் மார்னஸ் லபுஷாக்னே - பாட் கம்மின்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்திய லபுஷாக்னே 70 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதத்தை நெருங்கிய பாட் கம்மின்ஸும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டார். அதன்பின் கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நாதன் லையன் மற்றும் ஸ்காட் போலண்ட் இணை இந்திய அணி பந்துவீச்சை சோதித்தனர்.