
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்தப் போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளிலும் இதே அணி விளையாடும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஆல் ரவுண்டர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என பலமான பவுலிங் யூனிட்டுடன் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை எதிர்கொள்கிறது. மேலும், டேவிட் வார்னர் மற்றும் கவாஜா மட்டுமல்லாது மார்கஸ் ஹாரிஸ் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.