
ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடுவதற்காக இங்கிலாந்துக்குப் பயணப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு அணி வீரர்களும் தற்பொழுது இங்கிலாந்தில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி வீரர்கள் தாமதமாகச் சென்று இருந்தார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் இடம் பெறாத ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று விட்டனர். மேலும் அவர்களுக்கு இந்தப் போட்டி முடிவடைந்ததும் மிக முக்கியமாக ஆசஸ் கிரிக்கெட் தொடர் அங்கு நடக்க இருக்கிறது. மேலும் ஸ்மித், லபுசேன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் பயிற்சிக்காக விளையாடுகிறார்கள்.
தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள்? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டேரி மிக முக்கியமான கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார். மிகக்குறிப்பாக சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவில் ஆஸ்திரேலியா அணியை மிகவும் சிரமப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணியைப் பற்றி பேசியிருக்கிறார். இவர்கள் இருவரும் 25 மற்றும் 22 என மொத்தம் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.