
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது. சற்று தடுமாற்றமான நிலையில் இருக்கும் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எவ்வாறு எதிா்கொள்ளப் போகிறது என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது.
கடந்த உலகக் கோப்பை போட்டியில் இதே ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இறுதி ஆட்டத்தில் தோற்றது. அடுத்ததாக, கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதி ஆட்டத்திலும் இதே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. எனவே, ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இந்த முறையாவது தப்பிக்கும் முயற்சியில் இருக்கிறது இந்தியா. இப்போட்டியின் குரூப் சுற்றில் 4இல் 3 ஆட்டங்களில் வென்றாலும் அவற்றில் அட்டகாசமாக விளையாடியதாக எந்தவொரு ஆட்டத்தையும் குறிப்பிட முடியாத நிலையே இருக்கிறது.
டாப் ஆா்டரில் வரும் பேட்டா்கள், பந்துகளை வீணடிப்பதைக் குறைத்து ரன்கள் சோ்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். இதில் ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்பிரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிக்ஸ் என அனைவருக்குமே பங்குள்ளது.