
இந்திய அணி சொந்த நாட்டில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இந்திய அணி உலகக்கோப்பைக்கு எந்த மாதிரியான அணியை களம் இறக்குமோ, அதே மாதிரியான அணியை களம் இறக்கி விளையாடும். இரண்டு அணிகளுமே ஏறக்குறைய முழு பலம் கொண்ட அணியை இறக்கி தங்களை பரிசோதித்துப் பார்ப்பார்கள். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கு விளையாடி இருந்தது. இந்தத் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கும் பொழுது, ஆஸ்திரேலிய சூழ்நிலைக்குப் பழக இந்திய அணி சில நாட்கள் முன்னதாக சென்று அங்கு உள்நாட்டு ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி தன்னை தயார்படுத்திக் கொண்டது. அதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. தற்பொழுது ஒருநாள் உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் போட்டிகள் அமைத்து ஏற்பாடு செய்திருக்கிறது.