
ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் சோபிக்க தவறினர். அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கிய செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைக் குவித்தார்.
இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்துள்ளது.