
நடப்பு உலகக் கோப்பைக்கு வருவதற்கு முன்பாகவே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் பெரிதாக வெளிப்பட்டன. மேலும் அந்த அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா இடம் பெற மாட்டார் என்பது, அந்த அணியை பாதிக்கும் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி எப்பொழுதும் கணிக்க முடியாத அணியாக இருந்திருக்கிறது. எனவே அவர்கள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏதாவது பெரிய ஆச்சரியங்களை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான செயல்பாட்டை நடப்பு உலகக் கோப்பை தொடரில் கொண்டிருக்கிறது. அவர்கள் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மேலும் தற்காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், உலகக் கோப்பையில் தாக்கம் தரக்கூடிய இன்னிங்ஸ் எதையும் இதுவரையில் விளையாடவில்லை.
இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய மண்ணில் பாபர் அசாம் குறைந்தது மூன்று சதங்களாவது அடிப்பார் என்று கூறியிருந்தார். பாகிஸ்தான அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே எஞ்சி இருக்க, பாபர் அசாம் பேட்டில் இருந்து ஒரு சதம் கூட வரவில்லை. மேலும் பாபர் அசாம் கேப்டன்சி குறித்து பெரிய விமர்சனங்கள் வெளியே சென்று கொண்டிருக்கிறது. அவர் உலகக் கோப்பைக்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பாரா? என்பது சந்தேகம்தான்.