
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. அதில் தொடர் தோல்விகளால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 46.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, சௌத் ஷகில் 52 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 271 ரன்களை துரத்திய தென் ஆபிரிக்காவுக்கு கேப்டன் டெம்பா பவுமா 28, குயின்டன் டீ காக் 24, வேன் டெர் டுஷன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். அவர்களைப் போலவே ஹென்றிச் கிளாசென் 12, டேவிட் மில்லரும் 29 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள்
இருப்பினும் 4ஆவது இடத்தில் களமிறங்கிய ஐடன் மார்க்கம் பாகிஸ்தானுக்கு சவாலாக மாறி 91 ரன்கள் அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மார்கோ யான்சென் 20, கோட்ஸி 10 ரன்களில் அவுட்டானதால் தென் ஆபிரிக்காவின் வெற்றி கேள்விக்குறியான போதிலும் கடைசி நேரத்தில் லுங்கி இங்கிடி 4, கேசவ் மகாராஜ் 7, தப்ரைஸ் ஷம்சி 4 ரன்கள் எடுத்து 47.2 ஓவரில் இலக்கை எட்ட வைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தனர்.