
இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது முக்கியமான ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தலான துவக்கத்தை கண்டுள்ளது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி குசால் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா ஆகியோரது சிறப்பான சதம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது.
பின்னர் 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் 113 ரன்களையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து அசத்தினர்.