
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன.
அதிலும் குறிப்பாக பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி என புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தோல்வியே அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி கேப்டன் பாபர் ஆசாமின் செயல்பாடுகளும் இந்த தொடரில் பெரிதளவில் இல்லாதது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் அவர் கேப்டன்ஸியில் எடுக்கும் முடிவுகள், பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம், அவரது பேட்டிங் ஃபார்ம் என அனைத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது கேப்டன்சி குறித்த கேள்விகளும் வலுத்தன.