
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபகர் ஸமான் 10 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சௌத் ஷகீலும் 8 ரன்களில் நடையைக் கட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த் கேப்டன் முகமது ரிஸ்வான் - சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் ஆகா 45 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் தயாப் தாஹிர் 38 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 22 ரன்களையும், நசீம் ஷா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.