
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற் கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேச மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடந்தது.
இதில், வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீராங்கனையான ஃபர்கானா ஹோக் நிலையான நின்று 107 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷமிமா சுல்தானா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு வந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான நாகர் சுல்தானா 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஷோபனா மோஸ்தரி 23 ரன்கள் எடுக்க வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் மட்டுமே எடுத்தது.