BAN vs IND, 1st ODI: இந்திய அணியின் வெற்றியைப் பறித்த மஹதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான்!
இந்திய அணிக்கெதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே வங்கதேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஷிகர் தவான் 7 ரன்னுடன் வெளியேற கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்னுக்கு அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 9 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
Trending
ஸ்ரேயஸ் அய்யர் 24 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னும் அடித்தார். இப்போட்டியில் தாக்குப் பிடித்து விளையாடிய கேஎல்ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை கைப்பற்றினார். எபோடட் ஹூசைன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் நஜ்முல் ஹூசைன் சாண்டே, தீபக் சஹார் வீசிய முதல் பந்திலேயே ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் வந்த அனமுல் ஹக் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - ஷாகிப் அல் ஹசன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் ஷாகிப் அல் ஹசனை 29 ரன்களிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸை 41 ரன்களிலும் வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றி இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிம் 18, மஹ்முதுல்லா 14, அஃபிஃப் ஹொசைன் 6, எபோடட் ஹொசைன், ஹசன் மஹ்முத் ஆகியோர் ரன் ஏதுமின்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து சென்றனர். இதனால் இந்திய அணி எளிதாக வெற்றிபெறும் என்ற எதிபார்ப்பு நிலவியது.
ஆனால் கடைசி விக்கெட்டுக்கு இணைந்த மெஹிதி ஹசன் - முஸ்தபிசூர் ரஹ்மான் இணை அவ்வளவு எளிதாக நாங்கள் தோல்வியை ஒப்புகொள்ளமாட்டோம் என அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களை விளாசி ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினர். அதிலும் தீபக் சஹார் வீசிய 44ஆவது ஓவரில் மட்டும் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசிய இந்த இணை, 15 ரன்களைச் சேர்த்தது. இதனால் கடைசி 36 பந்துகளில் வங்கதேச அணி வெற்றிபெற 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இறுதியில் 45.5 ஓவரில் வங்கதேச அணி இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹதி ஹசன் 32 ரன்களுடன், முஷ்தபிசூர் ரஹ்மான் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 50 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் சென், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now