BAN vs PAK: பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு; முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!
வங்கதேச டி20 தொடருக்கான சல்மான் அலி ஆகா தலைமையிலான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Pakistan T20I Squad for Bangladesh: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாரிஸ் ராவுஃப், ஷதாப் கான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
வங்கதேச அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூலை 16ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியானது எதிர்வரும் ஜூலை 20ஆம் தேதி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதில் முதல் டி20 போட்டி ஜூலை 20ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூலை 22ஆம் தேதியும், ஜூலை 24ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ஷதாக் கான் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். இதுதவிர்த்து அணியின் முன்னணி வீரர்களாக கருதப்படும் முன்னாள் கேப்டன்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அஃப்ரிடி உள்ளிட்டோரும் இத்தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்கள் கடந்த தொடரிலும் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஃபகர் ஸமான், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் அஹ்மத் டேனியலிற்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அப்ரார் அஹ்மத், சுஃபியான் முகீம், முகமது ஹாரிஸ், சைம் அயூப் உள்ளிட்டோர் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
பாகிஸ்தான் டி20 அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, அகமது டேனியல், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஸமான், ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, சுஃபியான் முகீம்
Win Big, Make Your Cricket Tales Now