
வாங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் தன்ஸித் ஹசன் 2, சௌமீயா சர்க்கார் 7, தாவ்ஹித் ஹிரிடோய் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - மஹ்முதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் நஹ்முல் ஹொசைன் சாண்டோ 36 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் இருந்த மஹ்முதுல்லா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் ஷாகிப் அல் ஹசன் 21 ரன்களுக்கும், மஹ்முதுல்லா 54 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முசரபானி மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.