
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அந்த போட்டியில் களமிறங்கிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தம்முடைய ஹெல்மெட் கடைசி நேரத்தில் பழுதாகி இருந்ததை பார்த்து மாற்றிக் கொண்டிருந்த போது வங்கதேச அணியினர் காலதாமதம் செய்வதாக நடுவரிடம் அவுட் கேட்டார்கள்.
அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த 2 நிமிடத்திற்குள் முதல் பந்தை அதற்கடுத்த பேட்ஸ்மேன் எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மேத்யூஸ் மீறியதால் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்று மேத்யூஸ் நிலைமையை எடுத்துரைக்கும் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கொஞ்சமும் செவி சாய்க்காமல் அவுட்டை 2 முறை கேட்டு வாங்கியது ரசிகர்களை கோபமடைய வைத்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஷாகிப்பை அவுட் செய்த போது “நேரமாச்சு கிளம்புங்க” என்ற வகையில் மேத்யூஸ் பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். அதன் பின் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளாமல் பகையுடன் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் இவ்வளவு கேவலமான வேலையை செய்த ஷாகிப் மற்றும் வங்கதேசம் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்த மேத்யூஸ் தாம் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வந்த காணொளி ஆதாரத்தை ஐசிசியிடம் முறையிட்டு நடுவர்களின் தவறை சுட்டி காட்டினார்.