
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சதம் மற்றும் லிட்டன் தாஸ், சாத்மான் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், மொமினுல் ஆகியோரது அரைசதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 565 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
வங்கதேச அணி தரப்பில் அபாரமான விளையாடிய முஷ்ஃபிக்கூர் ரஹீம் 191 ரன்களையும், ஷாத்மான் இஸ்லாம் 93 ரன்களையும், மெஹிதி ஹசன் 77 ரன்களையும், லிட்டன் தாஸ் 56 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, குர்ராம் ஷஸாத் மற்றும் முகமது அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி மீண்டும் தடுமாறியது.