
ஜிம்பாப்வே அணி அடுத்ததாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சில்ஹெட்டில் ஏப்ரல் 20ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் ஏப்ரல் 28ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர்கள் கிரெய்க் எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் கிரெய்க் எர்வின் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். முன்னதாக அயர்லாந்து டெஸ்ட் தொடரில் இருந்து எர்வின் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பென் கரண், பிரையன் பென்னட் ஆகியோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி 15 பேர் அடங்கிய வங்கதேசா டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தொடர்கிறார். மேற்கொண்டு கடந்த டெஸ்ட் தொடரில் இடம்பிடிக்காமல் இருந்த அணியின் மூத்த விக்கெட் கீப்பர் முஷ்ஃபிக்கூர் ரஹீமிற்கு இத்தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.