
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், டி20 தொடரானது அக்டோபர் 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஷாய் ஹோப் தொடர்கிறார். மேகும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் அகஸ்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், எவின் லூயிஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியில் இரண்டு வடிவங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.