
வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மே 25ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகள் பைசலாபாத்திலும், கடைசி மூன்று போட்டிகள் லாகூர் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக வங்கதேச அணியானது ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மே 17ஆம் தேதியும், இரண்டாவது போட்டி மே 19ஆம் தேதியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.