
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 225/4 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சுல்தானா 52 ரன்களும் பர்கனா ஹோய்க் சதமடித்து 7 பவுண்டரியுடன் 107 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ரனா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதை தொடர்ந்து 226 ரன்களை விரட்டிய இந்தியாவுக்கு ஷஃபாலி வர்மா 4 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா 5 (7) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் நிதானமாக ரன்களை குவித்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவும் அடுத்து வந்த ஹர்லின் தியோல் ஜோடி சேர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.