
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் முர்ஷிதா கான் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த திலாரா அக்தர் - கேப்டன் நிகர் சுல்தானா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலாரா அக்தர் 39 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய சோபனா 15 ரன்களுக்கும், ஃபஹிமா கதும் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகர் சுல்தானா 28 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஷொரிஃபா கதும், நஹிதா அக்தர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ரேணுகா சிங், பூஜா வஸ்திரேகர், ஸ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.