
ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 44ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணியின் தொடக்க வீரர்கள் ஜோ கிளார்க் 4 ரன்களிலும், கார்ட்ரைட் 7 ரன்களிலும், தாமஸ் ரோஜர்ஸ் 26 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த வெப்ஸ்டர் - நிக் லார்கின் இணை அதிரடியாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லார்கின் அரைசதம் கடந்தார். பின் 36 ரன்களில் வெப்ஸ்டர் ஆட்டமிழக்க, 58 ரன்களைச் சேர்த்திருந்த லார்கினும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரிஸ்பேன் தரப்பில் அபாரமாக பந்துவீசிய மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.