
பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் மேத்யூ ஷார்ட் ரன்கள் ஏதுமின்றியும், டிராவிஸ் ஹெட் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேரி அரைசதமடித்த கையோடு 65 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட்ஹோம், ரியான் கிப்சன் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. ரெனிகேட்ஸ் தரப்பில் ஃபவத் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.